சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் வாகன சேவை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்


சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  102 ஆம்புலன்ஸ் வாகன சேவை  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
x

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் வாகன சேவையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

கடலூர்

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவச தாய் சேய் ஊர்தியான 102 ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி ஆம்புலன்ஸ் வாகன சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில் புதிய திறனறிவு பயிற்சி ஆய்வகத்தையும், உயிர் காக்கும் திறன் பயிற்சி ஆய்வு மையத்தையும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன், மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் லாவண்யா குமாரி, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சண்முகம், பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் டாக்டர் பாலாஜி சாமிநாதன், மருத்துவ அலுவலர் பாரி, டாக்டர் ஜூனியர் சந்திரேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

சீரமைப்பு பணிகளை ஆய்வு

இதனை தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி பகுதியில் ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் ஞானபிரகாசம் குளத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சிதம்பரம் கனகசபை நகரில் ரூ.2 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைய உள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனையில் உணவு சமைக்கும் இடத்திற்கு சென்று உணவை சாப்பிட்டு தரத்தினை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ரமேஷ் பாபு, சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) குமரதேவி, சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஹரிதாஸ், நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், துணைத்தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story