சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்து திருக்கோவில் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, முருக்கன்குடி கிராமத்தில் இந்து திருக்கோவில் கூட்டமைப்பு தொடக்க விழாவும், அதன் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டமும் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் ஆர்.கே.சதீஷ் குமார் கலந்து கொண்டு கூட்டமைப்பை தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி கோவில் சிலைகளை மர்ம ஆசாமிகள் இடித்து தரைமட்டமாக்கினர். பல மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த சிலைகள் புனரமைக்கப்படவில்லை. அதே சமயம் சரியான நபர்களையும் போலீசார் கைது செய்யவில்லை. உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் புனரமைப்பதாக யூ.டியூப் சேனல் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்த நபரை இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளத்தில் சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இந்து கோவில்களையும், இந்து கடவுள்களையும் இழிவாக பேசுவது, மத பிரச்சினையை தூண்டும் வகையில் யாரேனும் ஈடுபட்டால் இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட அமைப்பாளர் ஆசைத்தம்பி வரவேற்றார். முடிவில் வேப்பூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.