சென்னையில் அனைத்து கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை


சென்னையில் அனைத்து கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
x

சென்னையில் அனைத்து கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். அப்போது குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதற்கான சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்கு வசதியாக நாளை (வெள்ளிக்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. டிசம்பர் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளன.

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் நவம்பர் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. திருத்தப்பணிகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் நடக்க இருக்கும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, தாயகம் கவி; அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை; காங்கிரஸ் கட்சி சார்பில் நவாஸ், சந்திரமோகன்; பா.ஜ.க. சார்பில் கராத்தே தியாகராஜன், சவுந்திரராஜன்; தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி, சச்சின் ராஜா; இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வீரபாண்டியன், ரவீந்திரநாத்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆறுமுக நயினார், சுந்தர்ராஜ்; பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்யமூர்த்தி, சார்லஸ்; ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஸ்டெல்லா, பாரூக்; தேசிய மக்கள் கட்சி சார்பில் ரமேஷ், சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சியினரும், குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் வெளியிடுமாறு வலியுறத்தினர்.

தி.மு.க. கோரிக்கை

சுமார் ஒரு மணிநேரம் இந்த ஆலோசனை கூட்டம் நீடித்தது. கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களுக்கு அந்த கட்சியினர் அளித்த பேட்டி வருமாறு:-

ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.):- பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தவர்களின் பெயரும் இன்னும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த குளறுபடிகளை நீக்கும் வகையில், இறந்தவர்கள், இடம் மாறிச் சென்றவர்களின் பெயர்களை நீக்குவதை துரிதமாகவும், தெளிவாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று கோரினோம். அதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்யபிரத சாகு உறுதி அளித்தார்.

வாக்காளர் பெயரை நீக்குவதில் சில புகார்களைத் தடுப்பதற்காக புதிய முறை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, அந்த முகவரிக்கு பதிவுத் தபால் அனுப்பி, அவர்கள் அங்கிருப்பது அல்லது இல்லாததை தெரிந்துகொண்ட பின்னரே தேர்தல் பணியாளர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

அ.தி.மு.க. வலியுறுத்தல்

ஜெயக்குமார் (அ.தி.மு.க.) :- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பப் படிவங்களை விருப்பு, வெறுப்பு இல்லாமல் அரசியல் கட்சிகள் கேட்ட எண்ணிக்கையில் தர வேண்டும்.

குடிசை மாற்று வாரியங்களை இடிக்கும்போது அங்கு வசித்தவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை போய்விடுகிறது. அவர்களைப் பற்றி குடிசை மாற்று வாரியங்களுக்கு தெரியும். எனவே வாரிய அலுவலர்களை அழைத்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பேசி இடம் பெயர்ந்தவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

100 சதவீதம் குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிலை முகவர்கள்

இதற்கிடையே தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின்போது ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி நிலை முகவர்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் நியமிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story