ஓசூரில் வீட்டுவசதி வாரிய கோட்ட அலுவலகம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
ஓசூர்:
ஓசூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கோட்ட அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வீட்டுவசதி வாரிய அலுவலகம்
ஓசூரில் உள்ள பாகலூர் சாலை திட்டப்பகுதி 3-ல் ரூ.5 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலகம் மற்றும் ஓசூர் சிப்காட் தீயணைப்பு மீட்பு பணிநிலையம் திறப்பு விழா நடந்தது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் குத்துவிளக்கேற்றி அலுவலக வளாகத்தை பார்வையிட்டார். திறப்பு விழாவிற்கு ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிப்காட் தீயணைப்பு நிலையம்
இதனை தொடர்ந்து கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறுகையில், இந்த வீட்டுவசதி வாரிய கோட்ட அலுவலகம் 14,800 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 4 மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் தளம் அலுவலக வாடகை உபயோகத்திற்கும், 2-வது தளம் அலுவலக உபயோகத்திற்கு ஏற்ப சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு அரங்கு, கனிணி பிரிவு, பதிவறை, உணவருந்தும் அறை, கழிப்பறை, மழைநீர் சேகரிப்பு, கண்காணிப்பு கேமரா வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ஓசூர் சிப்காட் தீயணைப்பு நிலையம் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மீட்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையம் தரம் உயர்த்தப்பட்டதால், கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் 12 பணியாளர்கள், சிறப்பு உபகரணங்கள் கிடைத்துள்ளன என்றார். விழாவில் துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், ஓசூர் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மாது, ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் வெங்கடேஷ், பெருமாயி உள்பட பலர் கலந்து கொண்டனர்.