தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற: பழங்குடியின மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில், ஆந்திர மாநிலம், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் 17-12-2022 முதல் 22-12-2022 வரை நடைபெற்ற ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கிடையேயான 3-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவ, மாணவியர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
மேலும், அரியலூர் மாவட்ட இருளர் இன பழங்குடியின மக்களுக்கு முந்திரி சேகரம் செய்து கொள்ளும் உரிமைக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள்
மத்திய அரசின் தேசிய பழங்குடியினர் நல கல்விச் சங்கத்தின் கீழ் பழங்குடியினருக்காக 392 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் நிதி பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 2606 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
2022-2023-ம் ஆண்டிற்கான 3-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணாக்கர்கள் கலந்து கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் பிரபலமான தேர்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு 127 மாணவர்கள் மற்றும் 102 மாணவியர்கள் தேசிய அளவிலான இப்போட்டிகளுக்காக பயிற்சி பெறும் பொருட்டு தேர்வு செய்யப்பட்டனர்.
177 மாணவர்கள் தேர்வு
இப்பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 94 மாணவர்கள் மற்றும் 83 மாணவியர்கள், என மொத்தம் 177 மாணவ, மாணவியர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் 17-12-2022 முதல் 22-12-2022 வரை நடைபெற்ற 3-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் 22 மாநிலங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 177 பழங்குடியின மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்றனர்.
முந்திரி சேகர உரிமை ஆணை
இப்போட்டிகளில் இதுவரை காணாத வகையில் 10 தங்கம், 27 வெள்ளி மற்றும் 30 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களை வென்று தமிழ்நாடு 5-வது இடத்தை பெற்று சாதனை படைத்தது. பதக்கங்கள் வென்ற பழங்குடியின மாணவ - மாணவியர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
மேலும், அரியலூர் மாவட்ட இருளர் இன பழங்குடியின மக்களுக்கு முந்திரி சேகரம் செய்து கொள்ளும் உரிமைக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆணைகளை வழங்கினார். இதன்மூலம் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் இருளர் இன மக்கள் பயனடைவதோடு, முந்திரி தோட்டங்களில் தொழிலாளர்களாக பணி புரிந்த இருளர் இன மக்கள் தற்போது தொழில் முனைவோர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
பங்கேற்றவர்கள்
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ச.அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.