தர்மபுரி மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி


தர்மபுரி மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட விளையாட்டுமற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் கோப்பை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தர்மபுரி மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது. பொதுப்பிரிவில் (15 முதல் 35 வயது வரை) தடகளம், சிலம்பம், இறகுபந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

பள்ளி பிரிவு (12 முதல் 19 வயது வரை) மற்றும் கல்லூரி பிரிவில் (17 முதல் 25 வயது வரை) தடகளம், சிலம்பம், கபடி, கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, ஹாக்கி, மேஜைப்பந்து, கைப்பந்து, நீச்சல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறஉள்ளன.

இணையதளத்தில் பதிவு

இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் பிரிவில் (வயது வரம்பு இல்லை) தடகளம், இறகுபந்து, எறிபந்து, கைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அரசு பணியாளர்கள் பிரிவில் (வயது வரம்பு இல்லை) தடகளம், செஸ், இறகுபந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டு நடைபெறவுள்ளது. தற்போது பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவு ஆகியவற்றிற்கு கிரிக்கெட் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவு செய்ய வேண்டும். நேரடியாக கலந்து கொள்ள அனுமதி இல்லை.

எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பணியாளர்கள், பள்ளி-கல்லூரி வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story