திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ மறைவு - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்


திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ மறைவு - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 4 Jan 2023 2:58 PM IST (Updated: 4 Jan 2023 3:05 PM IST)
t-max-icont-min-icon

திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா திருமகன் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

பாட்டனார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் தந்தையார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எனப் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஈ.வெ.ரா. திருமகன் 2021-ஆம் ஆண்டுதான் முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்துகொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்து வந்தவர் ஈ.வெ.ரா திருமகன்.

ஒரு மாதத்துக்கு முன்பு கூட, குதிரையேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக்கொண்டு வந்து என்னிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது.

தனது அன்புமகனை இழந்துள்ள ஆருயிர் அண்ணன் இளங்கோவன் அவர்களை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்.

ஈ.வெ.ரா. திருமகன் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story