முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ந் தேதி திறந்து வைக்கிறார்: மேட்டூர் அணையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ந் தேதி திறந்து வைக்கிறார்: மேட்டூர் அணையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் பாசனத்துக்கு தண்ணீரை வருகிற 12-ந் தேதி திறந்து வைக்கிறார். இதையொட்டி மேட்டூர் அணையில் அமைச்சர் கே.என்.நேரு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

சேலம்

மேட்டூர்:

சேலம் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார். பின்னர் அவர் சேலம் பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பஸ் நிலையம், அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலை ஆகியவற்றை திறந்து வைக்கிறார். இதையடுத்து கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் வந்தார். பின்னர் அவர் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை, ஈரடுக்கு பஸ் நிலையம் மற்றும் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரியில் மேடை அமைக்கும் பணியை நேரில் சென்று பார்வையிட்டார்.

நலத்திட்ட உதவி

இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பஸ் நிலையத்தை வருகிற 11-ந் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். மேலும் அவர் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற உள்ள விழாவில் சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

மேலும் இந்த விழாவில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். வருகிற 12-ந் தேதி காவிரி டெல்டா பகுதி வேளாண் பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் தண்ணீர் திறந்து வைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மேட்டூர் அணை

இதைத்தொடர்ந்து மேட்டூர் அணைக்கு அமைச்சா் கே.என். நேரு நேரில் சென்றார். அங்கு வருகிற 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக அணையின் 16 கண் பாலம், மேல்மட்ட மதகு, வலது கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ரூ.6 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளதையொட்டி, பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், பொதுப்பணி துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மேட்டூருக்கு வந்த அமைச்சர் கே.என்.நேருவை, பொதுப்பணி துறையின் மேட்டூர் நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ், அணைப்பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன், மேட்டூர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மணிமாறன் ஆகியோர் வரவேற்றனர்.


Next Story