முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை - கருணாநிதி சிலை திறப்பு, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை - கருணாநிதி சிலை திறப்பு, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
x

2 நாள் சுற்றுப்பயணமாக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலைக்கு வருகை தருகிறார்.

திருவண்ணாமலை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலைக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தருகிறார். இன்று காலை அவர் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வருகிறார். அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் காலை சுமார் 11 மணிக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர் அவர் கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையடுத்து மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு திருவண்ணாமலை மாட வீதி பெரியத் தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஆடைகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து இரவு 7 மணியளவில் திருவண்ணாமலை-வேலூர் செல்லும் சாலையில் புதியதாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்களான பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில், கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அண்ணா நுழைவு வாயிலையும், கருணாநிதியின் உருவ சிலையையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

அதை தொடர்ந்து நாளை (9-ந் தேதி) காலை 9 மணியளவில் திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கியும் விழா பேருரையாற்றுகிறார்.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வரவேற்பு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் சாலைகளில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும் சாலைகளில் கட்சி கொடிகள் கட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பதவியேற்றபின் முதல்முறையாக திருவண்ணாமலைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கின்றனர். விழா நடைபெறும் பகுதிகளில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


Next Story