எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் சென்றார்
தேசிய அளவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகாருக்கு புறப்பட்டுச் சென்றார்.
சென்னை,
இன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் 20 கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் தனி விமானத்தின் மூலம் புறப்பட்டார். அவருடன் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
தனி விமானம் மூலம் பாட்னாவுக்கு புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், ஆ.ராசா எம்.பி., சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.
அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு பாட்னாவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 8 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.