முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி நெல்லை வருகை; பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி நெல்லை வருகை; பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்
x

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி நெல்லைக்கு வருகிறார். அவர் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

திருநெல்வேலி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி நெல்லைக்கு வருகிறார். அவர் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

மு.க.ஸ்டாலின் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) நெல்லைக்கு வருகிறார்.

பணிகள் தீவிரம்

நெல்லையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் விழா மேடை அமைக்கப்படுகிறது. அங்கு நடைபெறும் விழாவில் மு.க.ஸ்டாலின், நெல்லை மாவட்டம் முழுவதும் முடிவடைந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. கலெக்டர் விஷ்ணு தலைமையில் ஆலோசனை நடத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அரசு துறைகள் வாரியாக நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் விவரமும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

ஆணையாளர் ஆலோசனை

இந்தநிலையில் நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாநகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டுள்ள பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். இதற்காக விழா மேடை அமைக்கப்படும் ஐகிரவுண்டு மருத்துவக்கல்லூரி மைதானத்தை சமன்படுத்தி, மருத்துவக்கல்லூரியை சுற்றியும் உள்ள சாலைகளை தூய்மைப்படுத்த வேண்டும். விழாவுக்கு வருகிற பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநகர செயற்பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன், உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், சொர்ணலதா, மாநகர நல அலுவலர் (பொறுப்பு) ஆனிகுயின், உதவி செயற்பொறியாளர்கள் சரவணகுமார், லெனின், பைஜூ, சுகாதார அலுவலர்கள் சாகுல் அமீது, இளங்கோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story