முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு வருகை
x
வேலூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு வருகை தருகிறார். இதையொட்டி அவர் பங்கேற்கும் விழா மேடை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து காரில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு வந்தார்.

வேலூரில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணியளவில் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

அதனைதொடர்ந்து அங்கிருந்து காரில் முதல்-அமைச்சர் வேலூருக்கு வருகிறார். பிற்பகல் 1 மணியளவில் ரூ.54 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ள வேலூர் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் மதிய உணவு சாப்பிட்டு, சிறிதுநேரம் ஓய்வெடுக்கிறார்.

மாலை 4 மணியளவில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஏராளமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். அதைத் தொடர்ந்து அவர் ராணிப்பேட்டை செல்கிறார்.

மின்னொளியில் ஜொலிக்கும் பஸ்நிலையம்

முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ள வேலூர் புதிய பஸ்நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. திறப்பு விழாவையொட்டி பஸ்நிலையம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரவுநேரத்தில் புதிய பஸ்நிலையம் மின்விளக்குகள் வெளிச்சத்தில் ஜொலிக்கிறது. இதனை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். பஸ் நிலைய வளாகத்தில் கிடந்த மண், கற்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த பணிகளை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதேபோன்று முதல்-அமைச்சர் சாலை மார்க்கமாக பயணம் செய்வதால் வேலூர் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளையும் மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை படுத்தினார்கள்.

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்டமான விழா மேடை மற்றும் பயனாளிகள் அமருவதற்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அரசு அதிகாரிகள், பயனாளிகள் அமரும் இடங்கள் பற்றியும், பயனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு விழா மேடைக்கு வந்து செல்லும் பாதைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதேபோன்று வேலூர் கோட்டை மைதான விழா மேடையினை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.

முன்னதாக விழா மேடையினை மோப்பநாய் கொண்டும், மெட்டல் டிடெக்டர் கொண்டும் போலீசார் சோதனை செய்தனர்.


Related Tags :
Next Story