சென்னையில் சாலை பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


சென்னையில் சாலை பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x

சென்னையில் சாலை பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். ஒருங்கிணைந்து பணியாற்றவும், வாரம்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, 'சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பொதுவாக பழைய சாலைகளின் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கூறினார்.

இந்த வாரத்தில் சென்னையில் சாலைப் பணிகளை ஆய்வு நடத்தவுள்ளேன். சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளேன். சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்று கண்டிப்போடு கூறினார்.

அதிரடி கள ஆய்வு

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கள ஆய்வு பணியில் இறங்கினார். அவர், சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் ராம் நகர் 7-வது குறுக்கு தெரு, 3-வது பிரதான சாலை மேற்கு பகுதி மற்றும் கிழக்கு பகுதிகளில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளையும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மணப்பாக்கம்- கவுப்பாக்கம் - கிருகம்பாக்கம் சாலையில் ரூ.4 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளையும், ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் ரூ.2 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற சாலைப் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு பணிகள் நிலை குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வளசரவாக்கம் முதல் வடபழனி சிக்னல் வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரெயில் அமைந்துள்ள சாலைப் பணிகளை சீர்செய்திடவும், காலதாமதமில்லாமல் விரைந்து முடித்திட வேண்டும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஒருங்கிணைப்பு பணி

ரூ.7.14 கோடி மதிப்பீட்டிலான சாலைப் பணிகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும். நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறை, மின்வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், தொலைதொடர்புத் துறை மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, சாலைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.' என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு பணியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மெட்ரோ ரெயில் பணிகள்

பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில், சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், சென்னை மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனர் சித்திக், சென்னை மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன், முதன்மை பொது மேலாளர் அசோக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தி பணி முன்னேற்றம் குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரெயில் பணிகளை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story