சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்


சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்
x

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார். மேலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்தார்.

சென்னை,

75-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின விழா

தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விழாவில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போலீசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே மு.க.ஸ்டாலின் காலை 8.48 மணிக்கு வந்தார். அவரை தலைமைச்செயலாளர் இறையன்பு வரவேற்றார்.

பின்னர் அங்கிருந்த தென்னிந்திய பகுதிகளின் ராணுவ தலைமையக மேஜர் ஜெனரல் எஸ்.எஸ்.தாஹியா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி எஸ்.வெங்கட்ராமன், தாம்பரம் விமானப்படை அதிகாரி விபுல்சிங், கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எ.பி.படோலா, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) தாமரைக்கண்ணன் ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச்செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

அணிவகுப்பு மரியாதை

பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

இதில் சிறப்பு காவல் படைகள், காவல் பெண் கமாண்டோக்கள், சென்னை பெண்கள் காவல் பிரிவு, கடலோர பாதுகாப்பு குழுமம், நீலகிரி படைப்பிரிவு, குதிரைப்படை போலீசார் பங்கேற்று சிறப்பாக அணிவகுத்து சென்றனர்.

தேசியக்கொடி ஏற்றினார்

பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9 மணிக்கு வந்தார். அங்கிருந்தபடி மூவர்ண தேசியக்கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைத்து மரியாதை செய்தார். மூவர்ணத்தில் பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர்.

அதைத்தொடர்ந்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

முதல் சுதந்திர குரல் தமிழகமே

இந்திய துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான். 1600-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றியது. 'ஒரு நெல் மணியை கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது' என்று 1755-ம் ஆண்டு சொன்னவன் நெல்கட்டாஞ்செவல் பூலித்தேவன்.

கான்சாகிப் மருதநாயகம், கட்டபொம்மன், அவரது படைத்தளபதியாக இருந்த சுந்தரலிங்கத்தின் மாமன் மகள் வடிவு, வேலுநாச்சியார், குயிலி. மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் விடுதலைக்காக கடுமையாக போரிட்டனர்.

இவை அனைத்தும் 1857-ம் ஆண்டுக்கு முன்பே நடந்தவை. 1857-ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சிதான் முதலாவது இந்திய விடுதலைப்போர். அடிமைப்படுத்துதல் என்று தொடங்கியதோ, அன்றைய நாளே விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண் தமிழ் மண். தியாகத்தை போற்றுவதில் தி.மு.க அரசு எப்போதும் முன்னிலையிலும், நாட்டுப்பற்றில் தி.மு.க. எப்போதும் உறுதியாகவும் இருந்து வந்துள்ளது.

தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் 1,095 பேருக்கு மாதந்தோறும் தியாகிகளுக்கான நிதிக்கொடையை வழங்கி வருகிறோம். அவர்கள் இறக்க நேரிட்டால் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் 1966-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விடுதலையின் பவள விழா நிறைவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் சில அறிவிப்புகளை தற்போது வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்.

மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தொகை, ஆகஸ்டு 15-ந் தேதி (நேற்று) முதல் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்கள், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரது வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வு

மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பாக, மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவதோடு, அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947.60 கோடி கூடுதலாக செலவாகும்.

விடுதலை நாள் அருங்காட்சியகம்

நாட்டுக்காக உழைத்த தியாகிகளை போற்றுகின்ற இயக்கம் தி.மு.க. கடந்த ஓராண்டு காலத்தில் விடுதலை போராட்ட தியாகிகளை போற்றும் ஏராளமான பணிகளை செய்துள்ளோம்.

இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு கால தொடர் பங்களிப்பு குறித்து, எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, 'விடுதலை நாள் அருங்காட்சியகம்' சென்னையில் அமைக்கப்படும். எழும்பூரில் காந்தியின் சிலையை திறந்து வைக்கிறேன்.

தமிழகமும், காந்தியும்

தில்லையாடி வள்ளியம்மையின் தியாக உணர்வால் ஈர்க்கப்பட்ட காந்தி 1920-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிக நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். தனது வாழ்நாளில் 20 முறை தமிழகம் வந்த காந்தி தமிழை கற்றுக்கொண்டார்.

பாரீஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக வந்தவரை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண். 1921-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதியன்று இந்த நிகழ்வு நடந்தது. தற்போது 100 ஆண்டுகள் ஆகிவிட்டதன் அடையாளமாக சென்னை அருங்காட்சியக வளாகத்தில் காந்தியின் நினைவுச்சிலையை அமைத்துள்ளோம்.

திராவிட மாடல்

எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக உள்ள காந்தியின் மனிதநேய கொள்கைகளை கொண்ட திராவிட மாடல் ஆட்சியைதான் நாம் நடத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் செயல்படுத்தி தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில்தான் என்னை நான் நித்தமும் ஈடுபடுத்தி வருகிறேன்.

உள்புற ஒற்றுமை அவசியம்

இந்த பொறுப்பை எனக்கு வழங்கிய தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன் என்பதை வானத்தை நோக்கி பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடியின் நிழலில் நின்று உறுதி எடுத்துக்கொள்கிறேன்.

குமரி முதல் இமயம் வரை கிடைத்த விடுதலையை ஒற்றுமை உணர்வால்தான் காக்க முடியும். தேசியக்கொடியின் நிறம், மூன்றாக இருந்தாலும் அது ஒரே அளவோடு ஒன்றிணைந்து காணப்படுவதுபோல, பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவை காக்கும்.

வெளிப்புற சக்திகளின் தாக்குதலை வெல்ல வேண்டுமானால், உள்புற ஒற்றுமை என்பது மிகமிக அவசியம். இதுதான் உயிரை கொடுத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உத்தமர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விருதுகள்

அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டன.

பின்னர் விருது பெற்றவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்திற்கு அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதல்-அமைச்சர் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.

கட்டுப்பாடுகள் இல்லை

தற்போது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. சுதந்திர தின விழாவின்போது, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக பெருமளவில் கூட்டம் கூடுவதை மாநில அரசுகள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதி இருந்தது.

ஆனாலும் சுதந்திர தின விழாவுக்கு எந்த கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதிக்கவில்லை என்பதால் பொதுமக்கள் பலர் விழா நடந்த கோட்டை அருகே ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். அவர்களுக்காக அங்குள்ள சாலையின் ஓரத்தில் தடுப்பு போடப்பட்டு இருந்தது. விழா முடிந்ததும், பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் சுதந்திர தின வாழ்த்துகளை கையசைத்து தெரிவித்தபடி சென்றார்.

இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் அமருவதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே சமூக இடைவெளிவிட்டு தனித்தனியான பந்தல்களில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. சபாநாயகர் அப்பாவு, நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.


Next Story