கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10½ கோடியில் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10½ கோடியில் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10½ கோடியில் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.10½ கோடியில் புதிய கட்டிடம்

நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் மதியம் கோவில்பட்டிக்கு சென்றார். அங்குள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10½ கோடியில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மைய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

முன்னதாக கோவில்பட்டி தொழிற்பேட்டை அருகில் உள்ள திலகரத்தினம் தீப்பெட்டி தொழிற்சாலையை பார்வையிட்ட அவர், அங்கு தீக்குச்சி அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது வாரத்தில் தங்களுக்கு 4 நாட்கள் பணி வழங்குவதை 6 நாட்களாக உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெண் தொழிலாளர்கள், முதல்-அமைச்சரிடம் தெரிவித்தனர்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மனு

தொடர்ந்து நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் ராஜூ, தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விஜய் ஆனந்த், செயலாளர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அப்போது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஆபத்தான சிகரெட் லைட்டர்களை முறைகேடாக கன்டெய்னர்களில் ஏற்றி, மியான்மர் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதால், தீப்பெட்டி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சீனாவின் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

தீப்பெட்டி உற்பத்திக்கு படைகல சட்ட உரிமத்தை வாழ்நாள் உரிமமாக வழங்க வேண்டும். தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களான பொட்டாசியம் குளோரேட்டை இங்குள்ள உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து மத்திய மாநில அரசுகளின் உதவியோடு கிளஸ்டர் முறையில் பொட்டாசியம் குளோரேட் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அதற்கு மானிய விலையில் மின்சார வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மருத்துவ இயக்குனர் டாக்டர் சம்சாத் பேகம், மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் பொன் இசக்கி, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், டாக்டர்கள் பூவேஸ்வரி, ஸ்ரீ வெங்கடேஷ், சுதா,

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகரசபை தலைவர் கா.கருணாநிதி, யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சந்திரசேகர், நகரசபை ஆணையாளர் ராஜாராம், என்ஜினீயர் ரமேஷ், யூனியன் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இனாம் மணியாச்சி சந்திப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story