கலைமாமணி விருது பெற்ற 10 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
வறுமை நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
2021-22-ம் ஆண்டிற்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில், கலைமாமணி விருது பெற்றவர்களில் வயோதிக நிலையில், பொருளாதாரத்தில் நலிந்து இன்னலில் வாழ்கின்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக தற்போது வழங்கப்படும் பொற்கிழித் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் ஆக உயர்த்தி 10 கலைஞர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களில், 9 கலைமாமணி விருதாளர்களான கோவை நடராஜன், சாந்தி கணேஷ், எம்.யு. பிரேம்குமார், நா.கருமுத்து தியாகராசன், பிரசாத் வி.சி.ராஜேந்திரன், ஆ.லெட்சுமி, என்.ஜி.கணேசன், என்.வேலவன் சங்கீதா, வை.ராஜநிதி ஆகியோருக்கு முதல்-அமைச்சர் பொற்கிழித் தொகையாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, தலைமைச் செயலகத்தில் 14-ந்தேதி (நேற்று) வழங்கினார்.
கிராமியக் கலைஞர்கள்
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில், நபர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில், இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்க 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று 2021-22-ம் ஆண்டிற்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தொன்மை சிறப்புமிக்க தமிழக கிராமிய கலைகளை போற்றி வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 500 கிராமிய கலைஞர்களுக்கு இசை கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 லட்சத்துக்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் 10 கிராமிய கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
பங்கேற்றோர்
இந்நிகழ்ச்சியில் தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் பி.சந்திர மோகன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் எஸ்.ஆர். காந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.