வாக்குச்சாவடி முகவர்களுடன் 12-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல்
தென்காசி தெற்கு மாவட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் 12-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்த உள்ளதாக மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தெரிவித்து உள்ளார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடி முகவர்கள் அனைவருடனும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார். தென்காசி தொகுதிக்கு குத்துக்கல்வலசை எஸ்.ஆர்.ஆர். மஹால், ஆலங்குளம் தொகுதிக்கு ஏ.ஜே.மஹால், கடையநல்லூர் தொகுதிக்கு மறவர் திருமண மண்டபம் ஆகியவற்றில் நடைபெறுகிறது. தொகுதிக்கு உரிய அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் சில தொகுதிகளில் உள்ள முகவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அழைத்து அவர்களுடன் நேரடியாக உரையாடுவார். சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவருக்குரிய தொகுதியில் முகவர்களுடன் இணைந்து பங்கேற்க வேண்டும். நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர் அவரவர் தொகுதியில் கலந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி முகவர்களின் பட்டியலானது கழக தலைவரின் நேரடி பார்வைக்கு செல்வதால் முகவர்கள் பட்டியலை இறுதி செய்து வாக்காளர் பட்டியல் வரிசை எண், தொடர் எண் சரிபார்க்கப்பட்டு உடனடியாக தலைமை கழகத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் காணொலி சாதனங்கள் தொழில்நுட்ப ரீதியில் சோதனை செய்யப்பட்டு மின்தடை ஏற்படுமாயின் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளையும் செய்து வைக்க தலைமைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.