முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: சேலம் மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: சேலம் மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல், குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் பணியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 24-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை (திங்கட்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள். இதற்காக, நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகைபுரிந்து, அங்கிருந்து சாலை வழியாக தர்மபுரி மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் தொப்பூருக்குச் சென்று, நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சாலை வழியாக சேலம் மாவட்டம்,காமலாபுரம் விமான நிலையம் வருகை தந்து, விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்கள். இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story