கண்காட்சியை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
மஞ்சப்பை
ராணிப்பேட்டையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களின் புகைப்படம் அச்சடிக்கப்பட்ட மஞ்சப்பை பயனாளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அந்த மஞ்சப்பையில் குடிநீர் மற்றும் பிஸ்கெட் பாக்கெட் வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பையை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வைத்துக் கொண்டனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக மஞ்சப்பை வழங்கப்பட்டதாக அங்கிருந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கண்காட்சியை பார்வையிட்டார்
விழா மேடை அருகே தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கிராம பொருட்கள் கண்காட்சியையும், மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியையும், ஊரக மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
கண்காட்சியில் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மண்பானை வகைகள், கதர் துணி வகைகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்களில் தயார் செய்யப்பட்ட பொருட்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் சமத்துவபுரம், மழைநீர் சேகரிப்பு, பசுமை வீடுகள், தொகுப்பு வீடுகள் பண்ணைக்குட்டைகள் குறித்த தகவல்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பு
விழாவுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர் அனைவரும் அமரும் வகையில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் விழாவினை பார்க்கும் வகையில் விழா அரங்கில் ஆங்காங்கே 10-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரை (எல்.இ.டி. டி.வி) அமைக்கப்பட்டிருந்தது. அதில் விழா நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன.
மு.க.ஸ்டாலின் முன்பு நடனமாடிய மாற்று திறனாளிகள்
ராணிப்பேட்டையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரில் சென்று மனுக்கள் வாங்கினார். விழா மேடை அருகே அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளிடம் அவர் நலம் விசாரித்து கலந்துரையாடினார். அப்போது மாற்றுத்திறனாளி மாணவ -மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஊனம் ஊனம்... இங்கே ஊனம் யாருங்கோ... என்ற சினிமா பாடலுக்கு மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் நடனமாடினர். இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.
இதில் மாணவர் ஒருவர் கருணாநிதி வேடத்தில் வந்து மு.க.ஸ்டாலினை வரவேற்றார்.