ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி திறந்து வைக்கிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி திறந்து வைக்கிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி தஞ்சையில் திறந்து வைக்கக்கூடிய ரூ.130 கோடி மதிப்பிலான ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள்
தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பல பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்தநிலையில் புதிய பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ் நிலையம் ரூ.10.46 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்கா (ஸ்டெம் பூங்கா) கட்டப்பட்டுள்ளது. ரூ.4.39 கோடியில் ராஜகோரி மயானத்தில் எரிவாயு தகன மையம் கட்டப்பட்டுள்ளது. ரூ.7.32 கோடி மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது. ரூ.15.61 கோடி மதிப்பில் காந்திஜி வணிக வளாகம், ரூ.15.69 கோடியில் சூரியஒளி மின்நிலையம், ரூ.2.61 கோடி மதிப்பில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம், ரூ.2.25 கோடியில் கருணாசாமி குளம் மேம்படுத்தும் பணி, ரூ.1.44 கோடியில் அழகிகுளம் மேம்படுத்தும் பணி, பெத்தண்ணன் கலையரங்கத்தை ரூ.2.95 கோடியில் ஆம்பி தியேட்டராக மாற்றும் பணி என 10 பணிகள் நடந்து முடிந்துள்ளது.
மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
இந்த திட்டங்கள் உள்பட ரூ.130 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை வருகிற 27-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தநிலையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து முடிந்த பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்றுமுன்தினம் இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமாரி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பலர் உடன் இருந்தனர்.