தனது நடிப்புத் திறனால் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவர் - மாரிமுத்து மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


தனது நடிப்புத் திறனால் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவர் - மாரிமுத்து மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 8 Sept 2023 5:20 PM IST (Updated: 8 Sept 2023 5:25 PM IST)
t-max-icont-min-icon

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்துவின் மறைவையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குனரும் பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து, இயக்குனர் ஆனவர் மாரிமுத்து. ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story