ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதே அரசின் நோக்கம்-முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
ரேஷன் அரிசி கடத்தலில் தடுப்பதே அரசின் நோக்கம் என நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ரேஷன் அரிசி கடத்தலில் தடுப்பதே அரசின் நோக்கம் என நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ரேஷன் கடைகளில் ஆய்வு
தென் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று மதுரை விமான நிலையம் வந்தார். இதனை தொடர்ந்து அவர், பெருங்குடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேஷன் கடைகளில் தரமான உணவுப்பொருள்கள் வினியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். மதுரையில் 1300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றை புதுப்பித்து மக்கள் விரும்பும் இடமாக மாற்ற வேண்டும். இதில் முதல்கட்டமாக 75 கடைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. மதுரையில் 174 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதனை கடன் கொடுக்கும் மையமாக மட்டுமல்லாது, பொருளாதார வளர்ச்சி மையமாகவும் மாற்ற வேண்டும். நியாய விலைக்கடைகளில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டம் வருகிற 6-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல்
தமிழகத்தில் ரூ.238 கோடி மதிப்பீட்டில் 2.86 லட்சம் டன் நெல் சேமிக்கும் கிட்டங்கிகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மதுரை தோப்பூர் உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் 6 லட்சம் முதல் 8 லட்சம் டன் நெல் மூடைகளை தார்ப்பாய்களால் மூடும் நிலையினை மாற்ற வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் டன் நெல் மூடைகளை பாதுகாக்க முயற்சி செய்யப்பட்டு இந்த ஆண்டுக்குள் அப்பணிகள் படிப்படியாக முடிக்கப்படும். ஆயிரம் ரேஷன் அட்டைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.
ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதே அரசின் நோக்கமாக இருக்கிறது. கடந்த மாதங்களில் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 13 ஆயிரத்து 8 வழக்கு பதிவுகள் செய்து, 13 ஆயிரத்து 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 113 பேர் குண்டர் சட்டம் மற்றும் அதற்கு இணையான சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.