கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்டது. உதவி செய்வது போல் நடித்து குழந்தையை கடத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
ஒடிசா தம்பதி
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (வயது 30). இவருடைய மனைவி கமலினி(25). இவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கே.அய்யம்பாளையத்தில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
கமலினிக்கு கடந்த 22-ந் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அர்ஜூன்குமார் உடனிருந்து மனைவியையும், குழந்தையையும் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் அதே வார்டில் உள்ள மற்றொரு பெண்ணுக்கு உதவியாளராக இருப்பதாக கூறி பெண் ஒருவர் கமலினியிடம் அறிமுகம் ஆனார். கமலினிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்தனர்.
இதனால் தினமும் தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் மட்டும் குழந்தையை அந்த பெண் எடுத்து வந்து கமலினியிடம் கொடுத்து விட்டு, பின்னர் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தையை ஒப்படைத்து வந்தார். அர்ஜூன்குமார் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டார். கமலினி மட்டும் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் குழந்தைக்கு கமலினி தாய்ப்பால் கொடுத்துவிட்டு மதியம் தீவிர சிகிச்சை பிரிவில் ஒப்படைக்க, அந்த பெண்ணிடம் குழந்தையை கொடுத்து அனுப்பினார்.
குழந்தை கடத்தல்
மாலையில் அர்ஜூன்குமார் வந்து மனைவியிடம் குழந்தையை கேட்டுள்ளார். அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது குழந்தை இல்லை. பக்கத்து வார்டில் உதவியாளராக இருந்த பெண்ணையும் காணவில்லை. அதன்பிறகே குழந்தையை அந்தப் பெண் கடத்திச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து இரவு 7 மணி அளவில் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். உதவியாளராக இருந்த பெண் குறித்து விசாரித்தபோது, அந்த பெண் திருப்பூர் அம்மாபாளையத்தில் வசித்து வரும் விஜய் ஆனந்தின் மனைவி உமா (27) என்பது தெரியவந்தது. அதன்பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர்.
குழந்தை மீட்பு
மேலும் உமாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது கடைசியாக கள்ளக்குறிச்சியில் செல்போன் சிக்னல் காண்பித்தது. அதன்பிறகு சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. திருப்பூரில் இருந்த விஜய் ஆனந்திடம் விசாரித்தபோது உமா, கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் ராணி வீட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு தனிப்படையினர் விரைந்தனர்.
தொடா்ந்து நேற்று காலை 8 மணி அளவில் உமாவை பிடித்து குழந்தையை மீட்டனர். அப்போது உமா, இது தனக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தை என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பெண் கைது
இதையடுத்து குழந்தையும், உமாவையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்தபோது, 10 மணி நேரத்துக்கு மேல் பால் புகட்டாமல் இருந்தது தெரியவந்தது. மேலும் உமாவை பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாகவில்லை என்றும், சமீபத்தில் குழந்தை பெற்றெடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உமாவை போலீசார் கைது செய்தனர்.
மேலும் குழந்தையையும், கைதான உமாவையும் போலீசார் ஆம்புலன்சில் திருப்பூருக்கு அழைத்து வந்தனர்.நேற்று முன்தினம் மதியம் சுமார் 1 மணிக்கு கடத்தப்பட்ட குழந்தை நேற்று காலை 8 மணி அளவில் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம்
உமாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா கானூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் ஆனந்த்(28). இவரும், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆற்காடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த உமா(25) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள்.
ஒரே கம்பெனியில் வேலை செய்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரம் மல்லிகைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராணி(38) உறவினர் ஆவார்.
கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு
இந்த நிலையில் திருமணமாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை என்ற ஏக்கம் உமாவுக்கு இருந்துள்ளது. எனவே தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கமலினிக்கு உதவி செய்வதுபோல் நடித்து குழந்தையை கடத்தியுள்ளார். பின்னர் அவர், தன்னை யாரும் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனது உறவினர் ராணி வீட்டிற்கு வந்து தங்கியபோது போலீசில் சிக்கி உள்ளார்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் நேற்று இ்ரவு 8.30 மணியளவில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். தாய்-தந்தை குழந்தையை பெற்றதும் முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் சிந்தினர். போலீசாருக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தனர்.