காணாமல் போன 3 வயது சிறுவன் பி.ஏ.பி. வாய்க்காலில் பிணமாக மீட்பு


காணாமல் போன 3 வயது சிறுவன் பி.ஏ.பி. வாய்க்காலில் பிணமாக மீட்பு
x
திருப்பூர்


காங்கயத்தில் கடந்த 2-ந் தேதி காணாமல்போன 3 வயது சிறுவன் பி.ஏ.பி. வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டான்.

சிறுவன் மாயம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஏ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). லாரி டிரைவர். இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3½ வயதில் ரிதன் என்ற மகன் இருந்தான். கடந்த 2-ந் தேதி மாலையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ரிதன் திடீரென்று மாயமானான். இதையடுத்து சிறுவனை அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனாலும் சிறுவனை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் காங்கயம் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். சிறுவனை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் கண்காணிப்பு கேமராவில் சிறுவன் குறித்து எந்த காட்சியும் பதிவாகவில்லை. எனவே பி.ஏ.பி. வாய்க்காலில் சிறுவன் தவறி விழுந்திருக்கலாம்? என்ற சந்தேகத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் தேடி வந்தனர். ஆனால் வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. எனவே வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி சிறுவனை தேடினர். ஆனாலும் சிறுவன் குறித்த எந்த தகவலும் இல்லை. இதை தொடர்ந்து மீண்டும் ஏ.சி. நகர் பகுதியில் வீடு வீடாக சென்று நிலத்தடி தொட்டிகள், புதர்கள் உள்ளிட்ட சந்தேகப்படும் படியான இடங்களில் போலீசார் தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் நேற்று வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் அழுகிய நிலையில் ஒரு சிறுவனின் உடல் கிடப்பதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் பிணமாக கிடந்தது சிறுவன் ரிதனா என்று அவருடைய பெற்றோரை அழைத்து வந்து காட்டினர். அப்போது பிணமாக கிடந்த சிறுவன் ரிதான்தான் என்று அவனுடைய பெற்றோர் அடையாளம் காட்டினர். பின்னர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கயம் பகுதியில் மாயமான 3 வயது சிறுவன் வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் காங்கயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story