கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் வெகுவாக குறைந்துள்ளது-மக்கள் தொடர்பு திட்ட முகாமில் அதிகாரி பேச்சு
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் வெகுவாக குறைந்துள்ளதாக மக்கள் தொடர்பு திட்ட முகாமில் அதிகாரி தெரிவித்தார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
சூளகிரி அருகே பஸ்தலபள்ளி கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராஜேஸ்வரி தலைமை தாங்கி, பல்வேறு துறைகளின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 15 ஆயிரத்து 920 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் பயனடையும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் சூளகிரி வட்டாரத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடும் நடவடிக்கை
நமது மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த காலங்களை ஒப்பிடும் போது, குழந்தை திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளன. மேலும் தாய்-சேய் இறப்பும் குறைந்துள்ளது. குழந்தை திருமணம் செய்வதும், செய்து வைப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சூளகிரி தாசில்தார் அனிதா நன்றி கூறினார்.