பாலக்கோடு அருகே பிளஸ்-1 மாணவிக்கு கட்டாய திருமணம்-தாய் உள்பட 8 பேர் மீது போக்சோவில் வழக்கு
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே பிளஸ்-1 மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த, தாய் உள்பட 8 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பிளஸ்-1 மாணவி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். அவருடைய மகள் பாலக்கோடு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்தநிலையில் அந்த மாணவிக்கு கடந்த வாரம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த முனியப்பன் (வயது 26) என்பவருடன் திருமணம் நடந்தது.
இதனை அறிந்த மாணவியின் தந்தை, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனக்கு தெரியாமலும், மாணவியை கட்டாயப்படுத்தியும் திருமணம் செய்து வைத்ததாகவும், இதனால் மாணவியின் தாய் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அனைவரின் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
வழக்குப்பதிவு
இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த அவருடைய தாய் மற்றும் முனியப்பன், கோவிந்தம்மாள் (53), மாதேஷ் (58), செல்வி (33), அம்பிகா (31), சரவணன் (40), சண்முகம் (30) ஆகிய 8 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் மாணவியை மீட்ட போலீசார் தொப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெற்ற தாயே மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.