குழந்தை திருமணம் செய்து வைக்கக்கூடாது


குழந்தை திருமணம் செய்து வைக்கக்கூடாது
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மசினகுடியில் நடந்த விழிப்புணர்வு கண்காட்சியில் ஆதிவாசி மக்கள் குழந்தை திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று மகளிர் ஆணைய மாநில தலைவி ஏ.எஸ்.குமாரி பேசினார்.

நீலகிரி

கூடலூர்,

மசினகுடியில் நடந்த விழிப்புணர்வு கண்காட்சியில் ஆதிவாசி மக்கள் குழந்தை திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று மகளிர் ஆணைய மாநில தலைவி ஏ.எஸ்.குமாரி பேசினார்.

கண்காட்சி

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மசினகுடி பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் தானியங்கள், கீரைகள், காய்கறிகளில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து பலகாரங்களை சாப்பிட்டு அதன் சுவையை உணர்ந்து பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

குழந்தைகள் பாதுகாப்பு

பின்னர் மகளிர் ஆணைய மாநில தலைவி ஏ.எஸ்.குமாரி பேசும்போது கூறியதாவது:-

ஆதிவாசி மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை சிறு வயதில் திருமணம் செய்து வைக்கக் கூடாது. அறிவியல் ரீதியாக 18 வயதை கடந்த பின்னரே பெண் திருமணம் செய்து கொள்வதற்கான பருவத்தை அடைகிறாள். தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து உள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு சட்டங்கள் உள்ளது.

ஆனால் அது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என கண்காணிப்பதற்காக மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆதிவாசி மக்கள் மட்டுமின்றி பெண்கள், குழந்தைகள் சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு முறைகளை சாப்பிட வேண்டும். தொடர்ந்து இருமல் இருந்தால் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதை கைவிட்டு ஓமம் உட்கொண்டால் இருமல் வராது.

பாரம்பரிய மருந்துகள்

கொரோனா காலத்தில் ஊட்டச்சத்து, பாரம்பரிய மருந்துகள் தான் உடல் நலனை பாதுகாத்தது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆதிவாசி குழந்தைகளின் பாரம்பரிய நடனம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.



Next Story