சுகாதாரமில்லாத குழந்தைகள் மையத்தில் நோய் பரவும் அபாயம்
திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் குழந்தைகள் மையம் உள்ளது. இங்கு தண்ணீர் வசதி, கழிவறை வசதி ஆகியவை இல்லாத காரணத்தால் இங்குள்ள குழந்தைகள் சுகாதாரமற்ற வகையில் படித்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலா வரும் எலிகள்
திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் சின்னான் நகர், பெத்திசெட்டிபுரம் ஆகிய பகுதிகளுக்கான குழந்தைகள் மையம் ஒரே கட்டிடத்தில் தனித்தனி அறையில் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு மையங்களிலும் சேர்த்து 50 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையம் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் மழை வெள்ளம் மைய வளாகத்திற்குள் புகுந்து விடுகிறது. இவ்வாறு அடிக்கடி மழை வெள்ளம் தேங்குவதால் மையத்தின் வெளித்தளமானது பாசிபடர்ந்து காணப்படுகிறது.
இதனால் இங்குள்ள குழந்தைகள் நடந்து செல்லும் போது கீழே வழுக்கி விழும் அபாயம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சேதமடைந்த ஜன்னல் வழியாக எலிகள் உள்ளே புகுந்துவிடுகின்றன. இதனால் மையத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள சமையல் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை எலிகள் சேதப்படுத்தி விடுகின்றன. மேலும் பகல் நேரங்களிலும் உலா வரும் எலிகள் குழந்தைகளுக்கு கிலி காட்டி வருகின்றன. இதனால் அவர்கள் அச்சம் கொள்கின்றனர்.
சுகாதாரம் இல்லை
இதேபோல், இங்கு குடிநீர் மற்றும் தண்ணீர் தேவைக்காக பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி வைத்து குழாய் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் தண்ணீர் தொட்டியும், குழாய்களும் வெறும் காட்சி பொருளாக உள்ளன. இதனால் இங்குள்ள பணியாளர்கள் தண்ணீருக்காக பொது குழாய்களை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல், இங்கு கழிவு நீர் பாய்ந்து செல்வதற்கான கால்வாய் வசதி இல்லை. இதனால் இங்கு சமையல் பாத்திரங்கள் மற்றும் குழந்தைகளின் உணவு தட்டுகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும்போது வெளியேறும் கழிவு நீர் மைய வளாகத்தில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், மையத்தின் பின்பகுதியில் உள்ள சிறிய சந்து பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து நிற்கின்றன. அதுமட்டுமின்றி சில நேரங்களில் சுற்றுவட்டாரத்தில் இருந்து வரும் செப்டிக் டேங்க் கழிவு நீர் மைய வளாகத்தில் பாய்கிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், ேநாய் பரவும் அபாயம் உள்ளது.
மைய வாசலில் மது பாட்டில்
இதேபோல், மையத்தில் உள்ள கழிவறை கட்டிடங்கள் முற்றிலும் பராமரிப்பின்றி இருப்பதால் கழிவறை கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் இங்கு படிக்கும் குழந்தைகள் இயற்கை உபாதையை கழிக்க சிரமப்படுகின்றனர். இங்குள்ள ஒரு அறையில் மின் இணைப்பில் பழுது இருப்பதால் மின் விசிறி, மின்விளக்கு போன்றவற்றை பயன்படுத்த முடிவதில்லை. இதனால் இரண்டு மையத்தில் உள்ள குழந்தைகளும் ஒரே அறையில் அமர்த்தப்படுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, இந்த மையத்தின் முகப்பு பகுதியில் மதுபிரியர்கள் மது அருந்தி விட்டு காலி மதுபாட்டில்களை மைய வாசலிலும், அருகாமையிலும் போட்டு செல்கின்றனர். இவற்றை இங்குள்ள ஊழியர்கள் தினமும் அகற்ற வேண்டிய அவல நிலை உள்ளது. தற்போது மழைக்கால நோய்கள் பரவும் அபாயம் உள்ள நிலையில், இந்த குழந்தைகள் மையம் முற்றிலும் சுகாதாரமற்ற வகையில் இருப்பது குழந்தைகளின் பெற்றோர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. எனவே, அதிகாரிகள் இதை உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.