குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இலவச தொலைபேசி சேவை மைய எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் சிவகங்கை கே.ஆர். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பொக்கிஷம் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு, குழந்தை கடத்தல், வகுப்பறை தண்டனைகள், பாதுகாப்பு, பராமரிப்பு தேவைப்படும் சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் ஆகியவை குறித்து விளக்கி கூறப்பட்டது.
இலவச தொலைபேசி எண்
மேலும் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டால் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி சேவை மைய எண் 1098 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் தொலைபேசி எண் 04575 240166 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
போதை பழக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன், குழந்தைகளின் தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வகையில் கீழப்பூங்குடி மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் காயத்ரி, பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்கு பணியாளர் ஜூலி, அபர்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தமிழாசிரியர் இளங்கோ நன்றி கூறினார்.