19 பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி சோதனை
வேலூர் மாநகராட்சியில் 19 பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு வழங்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் 19 பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு வழங்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
காலை உணவு திட்டம்
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை அவர் வியாழக்கிழமை மதுரையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் 3,469 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காட்பாடி காந்தி நகர், சத்துவாச்சாரி, கஸ்பா ஆகிய இடங்களில் சமையல் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.
சோதனை முறையில்
இந்தநிலையில் பள்ளிகளுக்கு எப்படி உணவு கொண்டு செல்வது என்பது குறித்து வாகனங்கள் இயக்கி பரிசோதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சோதனை முறையில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதன்படி சத்துவாச்சாரியில் சமைக்கப்பட்ட வெண்பொங்கல் காலை 8 மணி அளவில் வாகனங்கள் மூலம் மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 19 தொடக்கப் பள்ளிகளுக்கு கொண்டு செல்லபட்டு அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேயர் ஆய்வு
இந்த பள்ளிகளில் படிக்கும் 1,541 பள்ளி குழந்தைகளுக்கு 254 கிலோ உணவு பரிமாறப்பட்டது. கொசப்பேட்டை மாசிலாமணி நடுநிலைப் பள்ளியில் நடந்த சோதனை முறையை மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பள்ளி குழந்தைகளுக்கு மேயர் உணவினை ஊட்டி மகிழ்ந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு மாநகராட்சியில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.