காதலர் தினத்தில் பிறந்த குழந்தைகள்
சிவகாசியில் காதலா் தினத்தில் 5 குழந்தைகள் பிறந்தன.
சிவகாசி,
காதலர் தினத்தை நேற்று இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அதே நேரத்தில் சிலர் காதலர் தினத்தை எதிர்க்கவும் செய்கிறார்கள். இந்த நாளை கொண்டாட நேற்று முன்தினம் இளைஞர்கள் தயாராகி இருந்த நிலையில் பல இடங்களில் பரிசு பொருட்களும், பூக்களும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. இளைஞர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த காதலர் தினமான நேற்றைய நாளை பயன்படுத்திக்கொண்டனர். பெரும் நகரங்களில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் காதலர் தினமான நேற்று அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடியை சேர்ந்த கதிர்செல்வம், ரூபா தம்பதிக்கும், காலை 6 மணிக்கு ஊராம்பட்டியை சேர்ந்த மூவேந்திரன், மாரீஸ்வரி தம்பதிக்கும், காலை 10 மணிக்கு ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த வேல்முருகன், கார்த்தீஸ்வரி தம்பதிக்கும், காலை 10.30 மணிக்கு தாயில்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன், வெண்ணிலா தம்பதிக்கும், தேனியை சேர்ந்த பிரதீப்ராஜா, பாண்டிபிரியா தம்பதிக்கும் குழந்தைகள் பிறந்தனர். நேற்று பிறந்த 5 குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.