நேரு பூங்காவில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்
காணும் பொங்கலையொட்டி நேரு பூங்காவில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்களால் களை கட்டியது.
கோத்தகிரி,
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த பூங்காவில் அழகிய புல்வெளிகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் உள்ளன. இந்த பூங்காவை கண்டு ரசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்ததால், நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று காணும் பொங்கலையொட்டி நேரு பூங்கா, சிறுவர் விளையாட்டு பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. ஏராளமான சிறுவர்கள் புதிதாக பொருத்தப்பட்டு உள்ள விளையாட்டு உபகரணங்களில் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. காணும் பொங்கலை தங்களது உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடினர்.
இதுமட்டுமின்றி மக்காத குப்பைகளை கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ள காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளின் சிற்பங்கள் முன் நின்றும், செயற்கை நீரூற்றுக்கு அருகில் நின்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து சென்றனர்.