சிறுவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிக்கு வரும் சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிக்கு வரும் சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஹெல்மெட் அணிய வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் ஏற்படுகின்றன. இதில் அநேக விபத்துகளில் தலையில் அடிபடுவதால் பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே, இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் முதலில் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள்.
2-வது முறையாக ஹெல்மெட் அணியாமல் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
வாகனம் பறிமுதல்
3-வது முறையாக பிடிபட்டால் ஓட்டுனர் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
மேலும், 18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனத்தை ஓட்டிச் செல்வது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும்.
பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்லும் சிறார்களிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும், பெற்றோர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
பெற்றோர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுத்திட வேண்டும்.
அனைவரும் பாதுகாப்பாக, வாகனத்தை விபத்தின்றி இயக்கி ராணிப்பேட்டை மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
----
Reporter : A. SUBARAJ_Staff Reporter Location : Vellore - RANIPET DEPOT