மன அழுத்தம் காரணமாக சிறுவர்கள் தப்பி செல்கின்றனர்


மன அழுத்தம் காரணமாக சிறுவர்கள் தப்பி செல்கின்றனர்
x

மன அழுத்தம் காரணமாக சிறுவர்கள் தப்பி செல்கின்றனர் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு ஆணைய உறுப்பினர் கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு உரிய இடமில்லாமல் தரையில் அமர வைத்து பாடம் சொல்லி தருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழுவிற்கு புகார்கள் வந்தது. புகாரின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அதன் பின்னர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு சிறார் கூர்நோக்கு மையங்கள், பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர். எனவே கூடுதலாக ஆலோசகர்களை நியமித்து மன அழுத்தம் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறார் கூர்நோக்கு மையங்களில் பாதுகாப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆணையம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அரசு சரிவர நடவடிக்கை எடுக்காததால் தான் சிறார்கள் அங்கிருந்து தப்பித்து செல்லும் நிலை தொடர்ந்து ஏற்படுகிறது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு ஆணையம் சமீப காலமாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் குறைகளை கண்டறிந்து தவறுகளை சுட்டிக் காட்டி வருகிறது. இதனால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு ஆணையத்திற்கு சமீப காலமாக தமிழக அரசு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதுகுறித்து நேரடியாக தமிழக முதல்-அமைச்சரை விரைவில் சந்திக்க உள்ளேன். விரைவில் புதுக்கோட்டையில் ஆணையத்தின் சார்பில் குழந்தைகள், மாணவ-மாணவிகள் தங்களுடைய குறைகளை புகார்களாக தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story