நெல் மணியில் 'அ' எழுத்தை எழுதிய குழந்தைகள்


நெல் மணியில் அ எழுத்தை எழுதிய குழந்தைகள்
x

விஜயதசமியையொட்டி நெல் மணியில் ‘அ’ எழுத்தை மழலை குழந்தைகள் முதன் முதலாக எழுதினர். பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

புதுக்கோட்டை

நவராத்திரி விழா

நவராத்திரி விழா கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயுத பூஜை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் அருள்பாலித்தனர். விழாவில் 10-ம் நாளான விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்வி உகந்த நாளாக விஜயதசமி கருதப்படுகிறது. இன்னாளில் மழலை குழந்தைகளை முதன் முதலாக நெல் மணியில் தாய் மொழியில் முதல் எழுத்தான 'அ' வை எழுத வைப்பது உண்டு. இதற்கு 'வித்யாரம்பம்' என அழைக்கப்படுவது உண்டு. மேலும் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ப்பார்கள்.

வித்யாஸ்ரம்

இந்த நிலையில் விஜயதசமி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் சாந்தநாத சாமி கோவிலில் சரஸ்வதி சன்னதி முன்பு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெற்றோர் பலர் தங்களது மழலை குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். மேலும் சரஸ்வதி சன்னதியில் நெல் மணியில் அ எழுத்தை தங்களது குழந்தைகளின் கைகளை பிடித்து பெற்றோர் எழுத கற்றுக்கொடுத்தனர். குழந்தைகளும் அ எழுத்தை எழுதினர். மேலும் எழுதுபொருட்கள், நோட்டுகள் வைத்து சரஸ்வதி அம்மனை வழிபட்டனர். சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

முதலாம் வகுப்பு

இதேபோல விஜயதசமியையொட்டி அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மேலும் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பொதுமக்கள் பலர் தங்களது குழந்தைகளில் முதன் முதலாக பள்ளிகளில் வகுப்புகளில் சேர்த்தனர். புதுக்கோட்டையில் ராஜகோபாலபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளுக்கு நோட்டுகள் தலைமை ஆசிரியை செல்வி வழங்கினார்.


Next Story