கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் சிறுவனின் கை பாதிப்பு
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் சிறுவனின் கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடுத்தனர்.
கடலூர் செல்லங்குப்பம் சுனாமி நகரை சேர்ந்த ரம்யா தனது குடும்பத்தினருடன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனது மகன் சரண்சக்தி (வயது 8) கடந்த மே மாதம் கீழே விழுந்ததில் அவனது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவனை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கையில் பிளேட் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கையில் வைக்கப்பட்ட பிளேட் அகற்றப்பட்ட பிறகு, சரண்சக்தியின் கை கீழ் நோக்கி வளைந்தபடி வளர்கிறது. மேலும் அந்த கையை அவனால் பயன்படுத்த முடியவில்லை. டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் அவனது கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் எனது மகனுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.