வாலிபர் மீது மிளகாய் பொடியை தூவி தாக்குதல்; 2 பேர் கைது
வாலிபர் மீது மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி புத்தூர் மேல வண்ணாரப்பேட்டை திடீர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 23). இவர் தனது நண்பனின் இருசக்கர வாகனம் திருட்டு போனது குறித்து ஒருவரிடம் விசாரித்துள்ளார். அப்போது அங்கு வந்த மேல வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர், எனது சகோதரன் மீது சந்தேகம் ஏற்பட்டு எப்படி விசாரிக்கலாம் என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெள்ளைச்சாமியின் சகோதரர் பிரபு, அவரது மனைவி செல்வி ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அப்போது செல்வி, சதீஷ்குமார் மீது மிளகாய் பொடியை தூவியுள்ளார். பிரபு உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். வெள்ளைச்சாமி பிளேடால் சதீஷ்குமாரை கிழித்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த சதீஷ்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் வெள்ளைச்சாமி மற்றும் பிரபு ஆகியோரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.