மிளகாய் விலை குறைவு; விவசாயிகள் ஏமாற்றம்
முதுகுளத்தூர் பகுதியில் பூச்சி தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகாய் விலையும் குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பகுதியில் பூச்சி தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் மிளகாய் விலையும் குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மிளகாய் விவசாயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து நெல் மற்றும் மிளகாய் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்குகின்றனர். மாவட்டத்திலேயே நெல் விவசாயத்தை விட மிளகாய் விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய அதிகமான கிராமங்களில் மிளகாய் விவசாயம் நடைபெற்று வருகின்றது. இதனிடையே முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கீழத்தூவல், கடம்போடை, பூசேரி, ஆலங்குளம், தேரிருவேலி, மட்டியாரேந்தல், தாழியாரேந்தல் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் மிளகாய் விவசாயம் நடக்கிறது.
இந்த ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய அதிகமான கிராமங்களில் பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் விலையும் குறைந்ததால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விலை குறைவு
இது குறித்து முதுகுளத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயி கஸ்பர் கூறியதாவது, இந்த ஆண்டு மிளகாய் செடிகளில் அதிகமான பூச்சி தாக்குதல் இருந்தது.
அதுபோல் தேவையான நேரத்தில் மழை பெய்யவில்லை. குறிப்பாக மிளகாய் விதை தூவப்பட்ட நேரத்தில் மழை பெய்திருந்தால் மிளகாய் செடிகளில் பூச்சி தாக்குதலும் இல்லாமல், செடிகள் நன்கு வளர்ந்து மிளகாய் நல்ல விளைச்சல் இருந்திருக்கும். சீசன் தவறி தற்போது பெய்து வரும் கோடை மழையாலும் மிளகாய் விளைச்சலுக்கு பாதிப்புக்கு காரணமாகும்.
தற்போது மிளகாய் விலையும் அதிகமாக குறைந்துள்ளது. 10 கிலோ மிளகாய் ரூ.1620-க்கு மட்டுமே விலை போகின்றது. கடந்த ஆண்டு இதே 10 கிலோ மிளகாய் ரூ.3 ஆயிரம் வரையிலும் விலை போனது.
கோரிக்கை
இந்த ஆண்டு பூச்சி தாக்குதலால் மிளகாய் விளைச்சல் ஒரு புறம் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், விலையும் குறைந்துள்ளதால் மிளகாய் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மிளகாய் விவசாயிகளுக்கு சாகுபடி செய்யும் மிளகாய்க்கு நல்ல விலையை அரசு வருகின்ற ஆண்டிலாவது நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.