சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
குமரி ஆழ்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
குமரி ஆழ்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
சின்னமுட்டம் துறைமுகம்
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. அதன்படி தினமும் அதிகாலை 4 மணிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று விட்டு இரவு 8 மணி முதல் கரைக்கு திரும்புவது வழக்கம். இங்கு, ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இதனால், உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்வார்கள்.
ஆழ்கடலில் சூறைக்காற்று...
இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்திய வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியொள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று தொடங்கி 3 நாட்களுக்கு(அதாவது 30-ந்தேதி) சூறைக்காற்றின் வேகம் மணிக்கு 45-65 கி.மீ வரை வீசும் என தெரிவித்துள்ளது.
எனவே, மீனவர்கள் இந்த நாட்களில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க செல்லவில்லை
அதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், விசைப்படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.