சின்னசேலம் கல்லூரி மாணவி 7 மாத கர்ப்பம் சிங்கப்பூருக்கு சென்ற காதலன் மீது வழக்குப்பதிவு


சின்னசேலம் கல்லூரி மாணவி 7 மாத கர்ப்பம்    சிங்கப்பூருக்கு சென்ற காதலன் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:15:56+05:30)

சின்னசேலம் கல்லூரி மாணவியை 7 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு சிங்கப்பூருக்கு சென்ற காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கல்லூரி மாணவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தச்சூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அந்த வகையில், விளம்பாவூரை சேர்ந்த உறவினரான கண்ணன் மகன் விஜய்(23) என்பவரை ஏற்கனவே மாணவி காதலித்து வந்துள்ளார்.

காதலன் சிங்கப்பூர் பயணம்

இந்த நிலையில், தச்சூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மாணவி வந்து செல்லும் போதெல்லாம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், விஜய் அங்கு வந்து மாணவியிடம் தனிமையில் பேசி பழகி இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில், விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டார். இதற்கிடையே மாணவிக்கு சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டது.

7 மாத கர்ப்பம்

இதையடுத்து, அவரது பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தனர். இதை கேட்டதும், மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் காரணமானவர் குறித்து மாணவியிடம் கேட்ட போது, அவர் விஜய் பற்றிய விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து விஜயின் பெற்றோரிடம் மாணவியின் பெற்றோர் தரப்பில்பேசி உள்ளனர். ஆனால், அவர்கள் தங்களது மகன் தற்போது தான் வெளிநாடு சென்றுள்ளார். அவரை அழைக்க முடியாது என்றும், ஒரு வருடத்துக்கு பின்னர் திருமணம் குறித்து பேசலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

வழக்குப்பதிவு

குழந்தை பிறந்த பின்னர் திருமணம் செய்து கொள்வதா? என்று எண்ணிய மாணவியின் பெற்றோர், இது குறித்து திட்டக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விஜய் மீது சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.


Next Story