சின்னாற்று வெள்ளப்பெருக்கில் ஆடு, மாடுகளுடன் 3 பேர் சிக்கினர்


சின்னாற்று வெள்ளப்பெருக்கில் ஆடு, மாடுகளுடன் 3 பேர் சிக்கினர்
x

பாலக்கோடு அருகே தொல்லகாது பகுதியில் சின்னாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆடு, மாடுகளுடன் 3 பேர் சிக்கினர். வாலிபா் ஒருவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே தொல்லகாது பகுதியில் சின்னாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆடு, மாடுகளுடன் 3 பேர் சிக்கினர். வாலிபா் ஒருவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

திடீர் வெள்ளப்பெருக்கு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சின்னாற்றின் குறுக்கே உள்ள தொல்லகாது பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது48). இவரது மனைவி கவுரம்மாள் (45). மகன் குமார் (30) மற்றும் அதேபகுதியை சேர்ந்த மகேஸ்வரி (33) ஆகியோர் நேற்று காலை 7 கறவை மாடுகள், 10 ஆடுகளை மேய்ச்சலுக்காக தொல்லகாது ஆற்றின் நடுவே உள்ள காலி நிலத்திற்கு ஓட்டி சென்றனர்.

அப்போது திடீரென ஆற்றில் 3 அடி தண்ணீர் சென்றது. அவர்கள் ஆற்றை கடந்து ஆடு, மாடுகளை ஓட்டி சென்றனர். திடீரென சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மேய்ச்சல் நிலத்தில் இருந்து ஆடு, மாடுகளுடன் வெளியே வர முடியாமல் திகைத்தனர்.

வாலிபர் மீட்பு

இதுகுறித்து அவர்கள் பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 30 அடி நீளமுள்ள ஆற்றின் கரையின் இருபுறம் கயிறு கட்டி குமாரை மீட்டனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் மற்ற 3 பேர் மற்றும் ஆடு, மாடுகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் ஆற்றில் நடுவில் கால் நடைகளுடன் சிக்கிய சின்னசாமி மற்றும் 2 பெண்கள் தங்களுக்கு உணவு மட்டும் வழங்குங்கள், வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு வருகிறோம் என்று உருக்கமாக கூறினர். இதனால் செய்வது அறியாமல் தவித்த தீயணைப்பு படையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story