திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் தேரோட்டம்
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி கொடியேற்றப்பட்டு பல்வேறு மண்டகப் படிகளில் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 5.10 - 6 மணிக்கு ஐம்பெரும் கடவுளார் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா தேர், அம்மன் தேர், வியாகர் தேர் என 3 தேர்களில் சாமி வலம் வருவது இவ்விழாவின் சிறப்பாகும். மதியம் 4 மணிக்கு திருப்பத்தூர், தம்பிபட்டி, புதுப்பட்டி, தென்மாபட்டி ஆகிய கிராமங்களில் இருந்து மக்கள் ஊர்வலமாக வந்து திருத்தளிநாதர் கோவிலை அடைந்தனர். அங்கு அனைவரையும் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வரவேற்று பிரசாதம் வழங்கினார். பின்னர் அங்கிருந்து அனைவரும் தேரோடும் வீதிக்கு சென்று தேர்களில் வீற்றிருக்கும் ஐம்பெரும் கடவுளாருக்கு தீபாராதனை நடைபெற்று 5 மணிஅளவில் அடிகளார் வெள்ளை வீச திருத்தேர்கள் வடம்பிடிக்கப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் விழா என்பதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.