முசிறி காவிரி ஆற்றில் சித்ரா பவுர்ணமி நிலாசோறு நிகழ்ச்சி
முசிறி காவிரி ஆற்றில் சித்ரா பவுர்ணமி நிலாசோறு நிகழ்ச்சி நடந்தது.
சித்ரா பவுர்ணமியையொட்டி முசிறி காவிரி ஆற்றில் நிலாசோறு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கள்ளத்தெரு மகா மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்திலும், மேலத்தெரு மகா மாரியம்மன் வேடபரி அம்மன் அலங்காரத்திலும், அங்காளம்மன் ஆண்டாள் அழகர் அலங்காரத்திலும், சின்ன சமயபுரத்தாள் மணப்பெண் அலங்காரத்திலும், பாலத்து மாரியம்மன் அம்மன் அலங்காரத்திலும், பால தண்டாயுதபாணி முருகன் அலங்காரத்திலும் காவிரி கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனைத் தொடர்ந்து காவிரியில் முசிறி மற்றும் சுற்றுலா பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் காவிரி ஆற்று மணலில் அமர்ந்து பவுர்ணமி நிலா ஒளியில் வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சாப்பிட்டனர். சிறுவர் சிறுமியர்கள், ஆண்கள் பெண்கள், புதுமண தம்பதியர்கள் ஆகியோர் கலாசார விளையாட்டான கண்ணாமூச்சி, மீன் பிடித்தல், மணல் வீடு கட்டி விளையாடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.