திருவந்திபுரம்தேவநாதசுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லிக்குப்பம்,
தேவநாதசுவாமி கோவில்
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி மே மாதம் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி நித்ய உற்சவர் வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
அதைத்தொடர்ந்து மறுநாளான 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு மேல் 4.40 மணிக்குள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசுவாமி கொடிமரத்திற்கு முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, மங்கள வாத்தியத்துடன் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
தெருவடைச்சான் உற்சவம்
மேலும் விழா நாட்களில் ஹம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீ வேணுகோபாலன் சேவை தங்க விமானத்திலும், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது. மே 1-ந்தேதி இரவு முக்கிய விழாவாக கருட மஹா உற்சவத்தன்று கருடவாகனத்தில் ஸ்ரீ தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். அதன்பின்னர் மஞ்சள் நீர் வசந்த உற்சவம், வெண்ணைத்தாழி உற்சவம், தெருவடைச்சான் உற்சவம், வேட்டை உற்சவம், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் தேவநாத சுவாமி வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
தேரோட்டம்
இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மே 5-ந்தேதி காலை 4.50 மணிக்கு மேல் 5.20 மணிக்குள் நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினம் இரவு பானக பூஜையும், 6-ந்தேதி மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவமும், 7-ந்தேதி காலை துவாதச ஆராதனமும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.