ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா


ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 24 April 2023 1:28 AM IST (Updated: 24 April 2023 1:29 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தஞ்சாவூர்

திருவையாறு:

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சித்திரை திருவிழா

தஞ்சை அருகே திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு சித்திரை விழா நாளை(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா அடுத்த மாதம்(மே) 7-ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது.

தேரோட்டம்

அதை தொடர்ந்து 29-ந் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று 6 ஊர்களில் இருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன்பு சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறும்.அடுத்த மாதம் 3-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா 6-ந் தேதி நடக்கிறது. இந்தவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.

பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

7-ந் தேதி பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story