முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி


முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

புளியங்குடி:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் நாகக்கன்னியம்மன், பெரிய பாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவுக்கான கால் நாட்டுதல் நிகழ்ச்சி குருநாதர் சக்தியம்மா தலைமையில் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் அம்மன்களுக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம், சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாமபடி கருப்பசாமி, மகாகாளி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அக்னிச்சட்டி, பால்குடம், தீர்த்தகுடம் எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திரளான பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி கும்மிப்பாட்டு நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 2-ந்தேதி காலை 7 மணிக்கு பால்குடம், தீர்த்தக்குடம் ஊர்வலம், 8 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 4 மணிக்கு குருநாதர் சக்தியம்மா தலைமையில் பக்தர்கள் அக்னிச்சட்டி, அக்னி காவடி, அலகு குத்துதல், பூப்பெட்டி, முத்துப்பெட்டி எடுத்து ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. 3-ந்தேதி அதிகாலை 6 மணிக்கு பொங்கலிடுதல், காலை 8 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், மதியம் 12 மணிக்கு முப்பெரும் தேவியர் அம்மன்களுக்கு அன்னாபிஷேகம், தொடர்ந்து பெரிய தீபாராதனை, அன்னதானம், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும், மாலை 6 மணி முதல் முளைப்பாரி கும்மிப்பாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story