சூலக்கல் மாரியம்மன் கோவில் 3-வது நாள் தேரோட்டம்


சூலக்கல் மாரியம்மன் கோவில் 3-வது நாள் தேரோட்டம்
x

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 3-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு, மே.29-

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 3-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சூலக்கல் மாரியம்மன் கோவில்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கண் நோயால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் சூலக்கல் மாரியம்மனை தரிசித்து கோவிலில் உள்ள தீர்த்தத்தை கண்களில் இட்டுக் கொண்டால் கண் நோய் குணமாகும் என்ற ஐதீகம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் தேர்த்திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 24-ந் தேதி முதல் தினசரி காலை, மாலை நேரங்களில் மாரியம்மன் குதிரை, சிம்ம வாகன சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சூலக்கல் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் சூலக்கல் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

3-வது நாள் தேரோட்டம்

அதனைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும், 26-ந்தேதி முதல் நாள் தேரோட்டமும், 27-ந்தேதி 2-ம் நாள் தேரோட்டமும் நடைபெற்றது. நேற்று மாலை கோவில் பின் பகுதியில் இருந்து 3-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் சூலக்கல் மாரியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், கோவை, பொள்ளாச்சி அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரைவடம் பிடித்து இழுத்தனர். இரவு தேர் கோவில் முன்பு நிலைக்கு வந்து நின்றது .இன்று (ஞாயிற்றுகிழமை) மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகத்துடன் தேர்திருவிழா நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன், விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story