கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைத்தல்-பழுது நீக்குதல் பணி மேற்கொள்ள நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைத்தல்-பழுது நீக்குதல் பணி மேற்கொள்ள நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்வதற்காக நிதியுதவி அளிக்கும் திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 வருடமாக இருப்பின் ரூ.2 லட்சமும், 20 வருடத்திற்கு மேலிருப்பின் ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கான தகுதிகள் கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருத்தல் கூடாது என்ற சான்றிதழ் (பிற்சேர்க்கை-3) அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை பிற்சேர்க்கை 2 மற்றும் 3-ல் உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw@tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் தலைமையிலான குழுவினரால் அவ்விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களை தர ஆய்வு செய்து, கட்டிடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதியுதவி வேண்டி கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.