புனித பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவா்கள் புனித நடைபயணம்


புனித பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவா்கள் புனித நடைபயணம்
x

உளுந்தூா்பேட்டையில் இருந்து கோணாங்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவா்கள் புனித நடைபயணம் மேற்கொண்டனா்.

கடலூர்


விருத்தாசலம்,

கடலூா் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் புனித நடைபயணம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான புனித நடைபயணம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குழந்தை ஏசு ஆலயத்தில் இருந்து தொடங்கியது. விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலய பங்குத்தந்தை பால் ராஜ்குமார் தலைமையில் உளுந்தூர்பேட்டை பங்குத்தந்தை ரட்சகர் நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு காட்டுநெமிலி, மங்கலம்பேட்டை, கர்நத்தம், காட்டுப்பரூர், எடச்சித்தூர் வழியாக கோணாங்குப்பம் ஆலயத்திற்கு வந்தனா். இந்த நடைபயணத்துடன் புனித பெரியநாயகி அன்னை சொரூபம் வைக்கப்பட்ட சிறிய தேரும் பவனியாக வந்தது. அப்போது கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலய திருத்தல அதிபர் தேவசகாயராஜ், சிறப்பு துணை குருக்கள் ஜெரால்டு, ரொசாரியோ உள்ளிட்ட மறைவட்ட குருக்கள் நடைபயணத்தை வரவேற்றனர். இதையடுத்து கோணாங்குப்பம் ஆலய வளாகத்தில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதனை சுல்தான்பேட்டை மறைமாவட்ட ஆயர் பீட்டர் ஆபீர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனா்.


Next Story