மதுரையில் கிறிஸ்துமஸ் விழா: ஆன்மிகத்தில் அரசியலை புகுத்த பார்க்கிறார்கள் - டி.டி.வி.தினகரன் பேச்சு
ஆன்மிகத்தில் அரசியலை புகுத்த பார்க்கிறார்கள் என மதுரையில் நடந்த ஐக்கிய கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
ஆன்மிகத்தில் அரசியலை புகுத்த பார்க்கிறார்கள் என மதுரையில் நடந்த ஐக்கிய கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
கிறிஸ்துமஸ் விழா
மதுரை அரசரடி பகுதியில் உள்ள இறையியல் கல்லூரியில் ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு கேக் வெட்டி, தொண்டர்களுக்கு வழங்கினார். இதுபோல், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. விழாவில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அண்ணாவின் கருத்து. அது தான், என்னுடைய கருத்தும். நாம் அனைவரும் வெவ்வேறு மதங்களில் பிறந்திருக்கிறோம். ஆனால், அனைவரும் இந்தியர்கள், மனிதர்கள்.
இதை உணர்ந்து மனித தன்மையோடு வாழ வேண்டும். அன்பும், நேசமும் தான் மனித குலம் அமைதியாக வாழ வழி வகுக்கும். மதங்களால் சிலர் மதம் பிடித்து, மனிதர்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்த நினைக்கிறார்கள். மதத்தின் அடைப்படையில் உலகம் பிரிந்து தீவிரவாதம் தலை தூக்குகிறது. விஞ்ஞான வளர்ச்சி பெற்ற பிறகும் தீவிரவாதம் மனித குலத்தை அச்சுறுத்தும் வகையில் வளர்ந்திருக்கிறது. இது வருத்தமான விஷயம்.
ஆன்மிகத்தில் அரசியல்
சில சுயநலவாதிகள், ஆன்மிகத்தில் அரசியலை புகுத்துகிறார்கள். இதனால் தான் பல பிரச்சினைகள் வருகிறது. இறைத்தன்மையை கருப்பொருளாக்கி, ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அனைத்து மதங்களுக்கும், சமூதாயத்திற்கும் சமமானது. மதசார்பின்மை இந்தியாவின் அடிநாதங்களில் ஒன்று.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சிறுபான்மையாக இருக்கும் மற்ற மதத்தினரையும் பாதுகாத்து, இந்தியாவை அமைதி பூங்காவாக்க வேண்டும் என்பது தான் காந்தியின் எண்ணம்.
மதவெறி, சாதி வெறி
இன்னும் சிலர், மதசார்பற்ற தன்மையில் இருக்கிறோம் என்று கூறி விட்டு, வாக்கு வங்கி அரசியலை நடத்துகிறார்கள். ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக பிரிவினையை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். மதசார்பின்மை என்று கூறி விட்டு, மதவெறி, சாதி வெறியை தூண்டுகிறார்கள். அவர்களுக்கு வேண்டியது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு வர வேண்டும். பரம்பரையாக தமிழகத்தை ஆள வேண்டும் என நினைக்கிறார்கள். தாத்தா, மகன், பேரன், கொள்ளு பேரன் என அனைவரும் பதவிக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள்.
தமிழின் பெயரால், சமூக நீதி, சமத்துவம் என்ற பெயரால் நம்மிடையே பிரிவினை ஏற்படுத்துபவர்கள் யார் என்பதை சிறுபான்மையின மக்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
தேர்தல்
வருகிற தேர்தலில் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால், போலிகளை அடையாளம் கண்டு விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். ஆன்மிகத்தில் ஈடுபடும் எவரும் அடுத்தவரை கெடுக்க நினைக்க மாட்டார்கள். மதநல்லிணக்க சமூதாயம் உருவாக வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றுமையுடன் வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.